நிகழ்வில் கே. எஸ். அழகிரி 
தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தல் | மகாபாரத கிருஷ்ணரும்; மு.க.ஸ்டாலினும்: கே.எஸ்.அழகிரி கூறிய உவமை

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமை வகித்தார், மாநகர மேயர் க.சரவணன், மாநகரத் தலைவர் எம்.எஸ்.கே.மிர்சாவூதீன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செந்தில்நாதன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பங்கேற்று, ராகுல்காந்தி மேற்கொண்ட நடைப்பயணம் வெற்றி பெற்றதை வரவேற்கும் வகையில், கும்பகோணம் வட்டம் சந்தனாள்புரத்தில் கொடியேற்று விழாவும், அவரது நடைப்பயணத்தை குறிக்கும் வகையில் கையோடு கைகோர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொது மக்கள் வழங்கி, செய்தியாளர்களிடம் கூறியது,” ஈரோட்டில் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாபெரும் வெற்றி பெறுவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலுள்ள எங்களது கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் கொள்கை உணர்வோடு இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால் எதிர்க்கட்சியில் இந்த நேரம் வரை மாபெரும் குழப்பம் நிலவுகிறது. பல உலக நாடுகளில் உள்ள குழப்பத்தை விட அங்கு பெரிய குழப்பமாக உள்ளது. இந்த குழப்பத்திற்கான காரணம் தமிழக பாஜக தான். பாஜக, தனது எதிர் சித்தாந்தத்தை உடையவர்களுக்கு எதிராகச் செயல்படுவது விட, உடனிருப்பவர்களுக்கு தான் அதிகமாகச் செயல்படுகிறார்கள்.

மகாராஷ்டரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து, அங்கு ஒழுங்கீனத்தை உருவாக்கினார்கள். இதே போல் கோவாவில் செய்தார்கள். தற்போது தமிழகத்திலும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழகத்தில் அதிமுகவை உருக்குலைத்து ஒன்றுமே இல்லாமல் போகின்ற அளவிற்கு வீழ்த்தியிருக்கின்றார்கள். அவர்கள் 2 பேரும் சேர்ந்து விடக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறியாக இருக்கின்றார். யாரையாவது ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்பதால் பாஜகவிற்கு தற்போது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நரியை போலத் தத்தளிக்கின்றார்கள் என்பது தான் பாஜகவின் உண்மையான முகமாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார்.

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனை குறித்துத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT