தமிழகம்

திறன் மேம்பாட்டு திட்டத்தின் முன்னோடி மையம் கோவையில் தொடங்கப்படும் - மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்

செய்திப்பிரிவு

கோவை: மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் முன்னோடி மையத்தை கோவையில் முதலில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்த மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி மைய வளாகத்தில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:

மோடி தலைமையிலான அரசு தொழில் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்த திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மத்திய அரசின் திறன் மேம்பாடு திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக கோவையில்முன்னோடி மையம் தொடங்கப்படும். இதற்காக வல்லுநர் குழு விரைவில் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து தொழில்துறையும் வளர்ச்சியடையும் வகையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதும் தொழில் நிறுவனங்களின் முக்கிய கடமை. அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களோடு இணைந்து இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்க மத்திய அரசு உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கோவையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது மிகவும் அவசியம்’’ என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில்துறையினருடன் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துரையாடினார். கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம், முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, பாஜக மூத்த தலைவர் பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT