திருமாவளவன் | கோப்புப் படம் 
தமிழகம்

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது: திருமாவளவன்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் இதுவரை கண்டிபிடிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி தொடங்கி வைத்து, அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வேங்கைவயல் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம்சாட்டுவதாக புகார் எழுந்தது. அதன்பிறகு, இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. ஆனாலும், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். திமுக அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அதிமுகவும், பாஜகவும், வேங்கைவயல் சம்பவம் குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? பாஜக, சங் பரிவார் அமைப்புகள் வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதி, மத முரண்களை கூர்மையாக்கி அரசியல் செய்யத் தொடங்கியிருக்கின்றன.

எனவே, வேங்கைவயல் சம்பவத்தில் இந்தக் கோணத்திலும் விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்து, திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற வேண்டும் என சீமான் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சமூக பிரச்சினைகளுடன் அரசியலை முடிச்சுப் போடத் தேவையில்லை என்றார்.

SCROLL FOR NEXT