சென்னை புறநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெருங்களத்தூர் செங்கல்பட்டு இடையே சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் உயர் மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் இருந்து சென்னைக்கு இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத் தலைநகர் என்பதால் சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வரக் கூடிய ஒரே நெடுஞ்சாலை ஜி.எஸ்.டி. சாலை (கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலை) எனப்படும் என்.எச்.45 தேசிய நெடுஞ்சாலை. சென்னையில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தொடங்கி தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், பெரியகுளம் ஆகிய பிரதான ஊர்களைக் கடந்து தேனி வரை நீண்டிருக்கிற இந்த சாலை சுமார் 470 கி.மீ. நீளம் கொண்டது. தமிழகத்தின் பிரதான சாலைகளில் ஒன்றாகவும், சென்னை மாநகரை இணைக்கக்கூடிய சாலையாகவும் இருக்கிறது. இந்த சாலையில் தின மும் சராசரியாக சுமார் 5.50 லட்சம் வாகனங்கள் புழங்குகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெருங்களத்தூர் அருகே வரும் போது தான் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும். ஆனால், தற்போது காட்டாங்கொளத்தூர் அருகி லேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்குகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிப் படுகின்றனர். சில இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது.
எனவே, அடுத்தக்கட்டமாக நெடுஞ்சாலையில் விரிவுப்படுத்த வும், மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கடந்த சில ஆண்டுகளாக மேற் கொண்டு வருகிறது.
பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு 4 வழி உயர்மட்ட சாலை அமைக்கவும், செங்கல் பட்டு - திண்டிவனம் இடையே தற்போதுள்ள சாலையை 8 வழி சாலையாக விரிவாக்கம் செய்யவும் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 500 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், ஜிஎஸ்டி சாலையில் உள்ள பெருங் களத்தூர், வண்டலூர், கூடுவாஞ் சேரி வரையில் காலை, மாலை நேரங்களில் 1.5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் நிற்கின்றன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்வகையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களைப் பிரித்து வண்ட லூரில் புதியதாக பேருந்து நிலை யம் அமைத்து இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, இங்குள்ள சாலைகளை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றுத்தீர்வை ஏற்படுத்தவும் அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதில், பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரையில் 30 கிமீ தூரத்துக்கு 4 வழி உயர்மட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை இருக்கலாம். இதற்கான முழு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல், செங்கல்பட்டு திண்டிவனம் இடையே தற்போதுள்ள சாலையை 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்கள் நிறைவடையும்போது, புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும்.
சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆய்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. எனவே, அடுத்த 6 மாதங்களில் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.