பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பஞ்சாமிர்தம் தயாரிக்க மலைபோல் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
அவ்வாறு வரும் பக்தர்கள் பழநியில் வைத்து பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து வழிபடுவது வழக்கம். பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்துவர். அதற்காக, பழநிக்கு கொடைக்கானல், தாண்டிக்குடி, பாச்சலூர், சிறுமலை மற்றும் கர்நாடகா மாநிலம் குடகில் இருந்தும் மலை வாழை பழங்கள் விற்பனைக்காக டன் கணக்கில் வந்துள்ளன. சாலையோரங்களில் வாழைப்பழக் கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன. ஒரு பழம் ரூ.7 முதல் ரூ.10 வரை தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. இந்தாண்டு 100 டன் வரை வாழைப் பழங்கள் விற்பனையாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இது குறித்து வியாபாரி முகமது அலிப் கூறியதாவது: தைப்பூச திருவிழாவின் போது 3 நாட்கள் கடை அமைத்து வாழை விற்பனை செய்வோம். பாதயாத்திரை வரும் பக்தர்கள் மலைவாழை பழத்தையே பஞ்சாமிர்தம் தயாரிக்க விரும்பி வாங்குவர். இந்தாண்டு வரத்து குறைந்ததால் விலை சற்று அதிகரித்துள்ளது. பழநி கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ள நிலையில் தைப்பூச விழாவும் சேர்ந்து வருவதால் அதிகளவில் பக்தர்கள் வருவர். வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.