ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தைத் தேரோட்டம். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தைத் தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கல்யாணசுந்தரம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இக்கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் தைத் தேர் திருவிழா (நம் பெருமாள் பூபதி திருநாள்) ஜன.26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 4-ம் திருநாளான ஜன. 29-ம் தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிப்.2-ம் தேதி (நேற்று) காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரங்கவிலாச மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளினார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (பிப்.3) காலை நடைபெற்றது.

இதற்கென நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்துக்கு 4.30 மணிக்கு வந்தடைந்தார். அதிகாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து நாளை (4 -ம் தேதி) சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தைத் தேர் நிறைவு நாளான பிப்ரவரி 5-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து,அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT