சென்னை: "பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்தார்.
முன்னதாக இன்று (பிப்.3) காலை பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், "பாஜக வட மாநிலங்களில் எப்படிபட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது. பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சியை எப்படி பாஜக பிடித்தது என்பது எங்களுக்கும் தெரியும்… மக்களுக்கும் தெரியும்… உங்களுக்கும் தெரியும்… எனவே நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக தான் நின்றது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். இதன் காரணமாக பாஜக எங்களுடன் பணியாற்ற விரும்பலாம். காத்திருந்து பாருங்கள். திமுகவைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம்." இவ்வாறு அவர் கூறினார்.