பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வது குறித்து பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
அதற்குப் பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
மக்களுக்கு தரமான பால் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவறு செய்யும் பால் நிறுவனங்கள் இனி தமிழகத்தில் செயல்பட முடியாது. ஃபார்மால்டிஹைடு என்ற ரசாயனம் பாலில் கலப்பதால் புற்றுநோய், அல்சர், குடல் நோய்கள் ஏற்படுகின்றன.
சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. யார் தவறு செய்தார்கள் என்பது விரைவில் தெரியவரும். ஆவின் பாலும் ரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது உறுதியாக உள்ளது'' என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.