‘நீட்’ நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:
‘நீட்’ நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்புகளின் தரத்தை உயர்த்தும் என்று மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் தவறாக வாதம் செய்து வருகின்றனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மருத்துவக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன. தமிழகத்தில் படித்த டாக்டர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது, திராவிட இயக்கம் போராடிக் கொண்டு வந்த சமூக நீதிக்கு எதிரானது. இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது. நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை ஒருபோதும் உயர்த்தாது. கிராமப்புற, ஏழை மாணவர்களை இது கடுமையாகப் பாதிக்கும். அவர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வாய்ப்புகள் பறிபோகும்.
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் எனக் கோரி அரசு டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் போராடி வருகின்றனர். இது நியாயமானது. அவர்களது போராட்டத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.