தமிழகம்

சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல் - மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி செல்லும் என கோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

கோவை: கோவை சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி செல்லும் என மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடிப்படையில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, கோவை சின்னதடாகம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று, 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் மறுநாள் அதிகாலை அதிமுக ஆதரவு பெற்ற எஸ்.சௌந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, சுதா கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அதில், தேர்தலில் பதிவான வாக்குகளை நீதிமன்றத்தின் முன் மீண்டும் சரியாக எண்ண உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஜனவரி 5-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “இந்த உத்தரவு கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த சரியான அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் நியமிக்க வேண்டும்.

மறு வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்து, அந்த முடிவின் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளைக் கொண்டே அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று உத்தரவிட்டது. இதையடுத்து, ஜனவரி 24-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அந்த ஆவணங்கள் சீலிடப்பட்ட உறையில் கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பான சீலிடப்பட்ட உறை, மனுதாரர், எதிர்மனுதாரர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று திறக்கப்பட்டது.

அதில் மொத்தம் பதிவான 5,375 வாக்குகளில், அதிமுக ஆதரவாளர் சௌந்திரவடிவு 2,553 வாக்குகளும், திமுக ஆதரவாளரும், இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரருமான சுதா 2,551 வாக்குகளும், 106 செல்லாத வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் மல்லிகா 65 வாக்குகளும் பெற்றதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

ஆட்சேபனை மனு தாக்கல்: இதையடுத்து, திமுக ஆதரவாளர் வேட்பாளரான சுதா தரப்பு வழக்கறிஞர் அருள்மொழி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மறுவாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 5,375 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முந்தைய அறிவிப்பின்படி பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 5,374 என தெரிவிக்கப்பட்டது. மறுவாக்கு எண்ணிக்கையானது சரியாக இல்லை. இதற்கு மனுதாரர் ஆட்சேபனை தெரிவிக்கிறார். எனவே, இதற்கு ஆட்சியரிடம் விளக்கம் பெற்று, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT