பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தர்மம் தொடர, வளர, சிறக்க மனம் நிறைந்த பத்திரிகை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஐக்கிய நாடுகள் சபை 1973-ம் ஆண்டு மே 3-ம் தேதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மே 3-ம் தேதி அன்று பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித உரிமைகளில் பத்திரிகை சுதந்திரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், சுதந்திரம் பெற்ற பின்பும் நாட்டு நடப்பு பற்றிய செய்திகளை பொது மக்கள் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக பத்திரிகை பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் ஜனநாயகத்தில் 4 முக்கியத் தூண்களில் பத்திரிகையும் ஒன்று.
குறிப்பாக சுதந்திரம் பெற்ற பிறகு பத்திரிகையின் மூலம் பல்வேறு செய்திகள் பொது மக்களுக்கு தெரியும் போது அவர்கள் விழிப்புணர்வு பெற்று பயனடைகிறார்கள். மேலும் பத்திரிகையின் மூலம் கடந்த கால நிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள், பண்டைய வரலாறு, கல்வி, அறிவியல், கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல் போன்ற பலவற்றைப் பற்றிய செய்திகளும், படங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைகிறது.
மேலும் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரவர் சார்ந்த மொழிகளில் எங்கிருந்தாலும் அனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளக் கூடிய நவீன வசதியும் இன்றைய கால கட்டத்தில் உள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பயன்பாடு அளவிடற்கரியது. உலக மக்களை இணைக்கின்ற மிகப் பெரிய பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகம் விளங்குகிறது என்பது பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தனிச்சிறப்பு.
மிக முக்கியமாக பத்திரிகைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பம். அதனை நிலைநாட்டும் வகையில் பத்திரிகைத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே பத்திரிகையின் தரம் உயர்ந்து கொண்டே போக வேண்டும்.
பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மூலம் உள்நாட்டு செய்திகளையும், உலகச் செய்திகளையும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் படித்தும், பார்த்தும் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு நல்ல சூழல் உள்ளதால் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் சிறப்பான பங்கு பாராட்டுக்குரியது. இதற்காக பாடுபடும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிறுவனர்கள் ஆகிய அனைவரும் பெருமைக்குரியவர்கள்.
சுதந்திரமாக பத்திரிகைகள் வெளிவருவதற்கு பத்திரிகையாளர்களும், நிருபர்களும் சுதந்திரமாக செயல்படும்போது எந்தவிதமான குறுக்கீடுகளும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்கு சமுதாயமும், அரசும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பத்திரிகையும், ஊடகமும் நியாயமாக, அநீதிக்கு இடம் கொடுக்காமல், வெளிப்படையாக, நடுநிலையோடு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு அதன் மூலம் சமுதாயம் முன்னேறி, நாடும் வளர்ச்சி பெற வேண்டும்.
பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தர்மம் தொடர, வளர, சிறக்க என் மனம் நிறைந்த பத்திரிகை சுதந்திர தின நல்வாழ்த்துக்களை பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.