சென்னை: தமிழகம் முழுவதும் சிறு கடைகளில் லஞ்சம் கேட்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்பான பட்டியல் தயாரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் புகார் அளிக்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் இனிப்பு, காரம் போன்ற உணவு வகைகளை விற்கும் கடைகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் தொழில் உரிமம், உணவு பாதுகாப்புத் துறையிடம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த துறைகள் சார்பில் கடைகளில் உரிமம் உள்ளதா, காலத்தோடு புதுப்பிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.
அவ்வாறு சென்னை ராயப்பேட்டை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கார உணவு வகைகளைத் தயாரிக்கும் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு ஓமப்பொடியில் ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ஒருவர் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் உரிமத்தைப் புதுப்பிக்காததால் ரூ.3 ஆயிரமும் வாங்கிச் சென்றாராம்.
இதை அறிந்த திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தினர், தொடர்புடைய அதிகாரிகளிடம், லஞ்சம் கேட்டது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தவீடியோ சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வணிகர் சங்கத்தினரின் புகாரைத் தொடர்ந்து,தொடர்புடைய அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது, ``தமிழகஅளவில் ஒருசில இடங்களில் இதுபோன்று அதிகாரிகள் லஞ்சம்கேட்டு வணிகர்களை மிரட்டுகின்றனர். அவர்களின் பட்டியலைத்தயாரித்திருக்கிறோம். 30-க்கும் மேற்பட்டோர் பட்டியலுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் புகார் அளிக்க இருக்கிறோம்'' என்றார்.
சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லஞ்சம் கேட்டது தொடர்பாக துறையின் மாவட்ட நியமன அலுவலர் சதிஷ்குமாரிடம் கேட்டபோது, ``அலுவலர்கள் யாரும் லஞ்சம் கேட்கக்கூடாது. புகார் பெறும் பட்சத்தில் துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.