மதுரை: மதுரையில் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மாநகராட்சி நீச்சல் குளம் புதுப்பொலிவுடன் பிப்.5-ல் திறக்கப்படுகிறது.
மதுரை காந்தி அருங்காட்சியகம் அருகே செயல்பட்ட மாநகராட்சி நீச்சல் குளம் போதிய பயிற்சியாளர்கள், பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் கரோனா தொற்று பரவலுக்கு முன்பே மூடப்பட்டது. அதன் பின்பு 3 ஆண்டு காலமாக திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் நீச்சல் குளம் சீரமைக்கும் பணி தொடங்கியது.
பழைய நீச்சல் குளம் 12 அடி ஆழம் இருந்தது. அதனால், பயிற்சியாளர்கள் இல்லாதபோது சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றபோது விபரீதங்கள் ஏற்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறிய நீச்சல் குளமும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயிற்சி பெற மற்றொரு நீச்சல் குளமும் தனித்தனியாக 5 அடி அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்களில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நீச்சல் பயிற்சி வழங்க ஆண், பெண் பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நீச்சல் பயிற்சியாளர்கள், மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர்கள்.
நீச்சல் குளம் அதிகாலை 5.30 முதல் இரவு 7.30 மணி வரை செயல்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலை, இரவில் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வசதியாக இரவைப் பகலாக்கும் வகையில் `போக்கஸ் லைட்டுகள்' கொண்ட 6 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மணி நேர நீச்சல் பயிற்சிக்கு பெரியவர்களுக்கு ரூ.35, சிறியவர்களுக்கு ரூ.18 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆடைகள் மாற்றுவதற்கு தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்றாட நீச்சல் பயிற்சி மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரத்யேக 15 நாட்கள் நீச்சல் பயிற்சி முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகள், மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீச்சல் குளப் பராமரிப்பும், செயல்பாடும் முதற்கட்டமாக தனியார் மூலம் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. பிப்.5-ம் தேதி இந்த புதிய நீச்சல் குளம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.