விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளில் முறைகேடு நடைபெறுவதாக கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. இந்தச் சாலை பணியின் ஒரு அங்கமாக விருத்தாசலம் பகுதிகளிலும் இப்பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளில் முறை கேடு நடைபெறுவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, குறிப்பிட்ட சில இடங்களில் சிலருக்கு சாதகமாக சாலையோர வடிகால் கால்வாய் பகுதியை விரிவாக்கம் செய்யாமல் இப்பணிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர். இந்த முறைகேட்டைக் கண்டித்து, விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கட்சியின் நகர அமைப்பாளர் ஆர். கலைச்செல்வன் தலைமையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இதுதொடர்பாக வருவாய்துறை, பொதுப்பணித்துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தனர். இதையேற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.