கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சம்பா நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன் னார்கோவில், புவனகிரி, குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 95 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது சில இடங்களில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. சில இடங்களில் அறு வடை நடந்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டுதினங்களாக வானம் மேகமூட் டத்துடன் லேசான காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வயல்களில் தண்ணீர் நிற்பதாலும், நெல் பயிர் சாய்ந்திருப்பதாலும் அறுவடைப் பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் நனைந்துள்ளன.
மழையால் ஈரம் காய ஒரு வாரம் ஆகும். முதிர்ந்த நெல் மணிகள் முளைத்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யும் போதும் நெல் மணிகள் உதிர்ந்து விடும் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.