வேலூர்: வேலூரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்து காட்பாடியில் இருந்து சென்னை புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த ரயிலில் பெண் ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் 10 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ரயில் மூலம் சென்னை புறப்பட்டார். ஆலப்புழாவில் இருந்து தன்பாத் நோக்கிச் சென்ற ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு நேற்று மாலை 6.20 மணிக்கு வரவேண்டும்.
ஆனால், 20 நிமிடங்கள் தாமதமாக 6.40 மணிக்கு வந்தடைந்தது. இதையடுத்து, முதல்வருக்கான தனிப் பெட்டியில் அவரை கட்சியினர் 7 மணியளவில் வழியனுப்பி வைத்தனர். அந்த ரயில் திருவலம் ரயில் நிலையத்தை கடந்தபோது 7.25 மணியளவில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் திடீரென நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்தனர். சுமார் 10 நிமிடங்கள் கழித்து ரயில் மீண்டும் புறப்பட்டது. அதேநேரம், அபாய சங்கிலியை இழுத்தது யார் என முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், பொதுப்பெட்டியில் பயணம் செய்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜாஸ்மதியா தேவி என்பவர் தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக ஒப்புக் கொண்டார். பின்னர், ரயில்வே அதிகாரிகள் அவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்ததுடன் அதே ரயிலில் பயணம் செய்ய அனுமதித்தனர்.