சென்னை: பாஜகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சியைத் தவிர, மற்ற காலங்களில் எல்லாம் கவர்ச்சி நிறைந்ததாக இருந்த பட்ஜெட், தற்போது வளர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது. இந்த ஆண்டு மூலதனச் செலவை ரூ.10 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது பாராட்டத்தக்கது. தமிழகம் இதை முறையாக உபயோகித்துக் கொண்டால், மிகப் பெரிய பயனைத் தரும்.
அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு ஊழல் செய்கிறது. சினிமா துறையைப் பொறுத்தவரை ரெட் ஜெயன்ட், சன் பிக்சர்ஸ் இல்லாமல் திரைப்படம் வெளியாவதே இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து பிப். 2-ம் தேதி (இன்று) அறிவிப்போம். எங்களைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக தலைமையில்தான் உள்ளது. மக்கள் அனைவரையும் தமிழக அரசு மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. அதிக அளவு விதவைகள் மதுவால்தான் உருவாகிறார்கள்.
அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியும், அவரை வேறொரு கோயிலில் பணியில் அமர்த்துகின்றனர். அறநிலையத் துறை என்பது கோயில்
அறங்காவலர்கள் செய்யும் நிர்வாகத்தை மட்டுமே கண்காணிக்க வேண்டும். ஆனால், அறங்காவலர்களை நியமிக்காமல் அதிகாரிகளை மட்டும் நியமிப்பதால்தான், அதிக அளவில் கொள்ளை நடக்கிறது. ஜிஎஸ்டி சோதனை என்ற பெயரில், தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடக்கும் வணிகங்களை கண்டுகொள்ளாமல், சிறிய கடைகளை தொந் தரவுக்கு உள்ளாக்குகின்றனர். இதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.