தமிழகம்

பெங்களூரு நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரம்: சிபிசிஐடி மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

செய்திப்பிரிவு

சென்னை: பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில், போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸார் மெதுவாக செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் என எச்சரித்துள்ளது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20.52 கோடி இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்து, 15 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி காஞ்சிபுரம் டிஎஸ்பி எம்.வேல்முருகன் அறிக்கை தாக்கல் செய்தார். அதைப் படித்துப் பார்த்த நீதிபதி, “ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள அறிக்கையைத்தான் தற்போதும் தாக்கல் செய்துள்ளீர்கள். சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை”என்று அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், “இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா, இந்த வழக்கு விசாரணைக்காக 3 முறை நேரில் ஆஜராகியுள்ளார். ஆனால், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறியிருப்பதன் மூலம், சிபிசிஐடி அதிகாரிகள் எந்த அளவுக்கு இந்த வழக்கில் தீவிரமாக உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது” என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும், சிபிசிஐடி போலீஸார் மந்தமாக செயல்பட்டால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் என்று எச்சரித்ததோடு, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் சரியாகவும், திறமையாகவும் விசாரித்து, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் பிப்.13-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT