தமிழகம்

ஐ.டி. பயன்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழக காவல்துறை: டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) அவசர கால தொடர்பு மற்றும் சேவை சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருச்சி என்ஐடி முதன்மையர் (கல்வி) ராம கல்யாண் தலைமை வகித்தார். அவசர கால தொடர்பு மற்றும் சேவை சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என்.சிவக்குமரன் முன்னிலை வகித்தார். சி-டாக் நிறுவனத்தின் பொது இயக்குநர் இ.மகேஷ் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவசர கால தொடர்பு மற்றும் சேவை சிறப்பு ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசியது: இந்தியாவிலேயே தமிழக காவல் துறைதான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பயன்பாட்டில் முன்னோடியாக விளங்குகிறது.

நுண்ணலை தொடர்பு: உதாரணமாக, பிஎஸ்என்எல் மற்றும் பிற தனியார் தொலைத்தொடர்புகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டாலும் கூட, தமிழக காவல் துறையின் தொலைத்தொடர்பு பாதிக்கப்படாமல் தனித்து செயல்படும் வகையில் நுண்ணலை தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 55 லட்சம் புகார்கள் வந்துள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 1,498 காவல் நிலையங்களில் 9.7 லட்சம் புகார்கள் வந்துள்ளன.

இதுதவிர, மகளிர் காவல் நிலையங்களில் 75 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான புகார்களுக்கு உடனடித் தீர்வு காண தொழில்நுட்பம் வெகுவாக உதவியுள்ளது.

இலக்கு பெரியதாக இருக்கட்டும்: என்ஐடி போன்ற தலைசிறந்த நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பொதுமக்களுக்கு உதவிபுரியும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் இலக்கு பெரிதாக இருக்கவேண்டும். அதை அடையும் வரை கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். விழாவில், மத்திய மண்டல ஐ.ஜி. க.கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா, திருச்சி சரக டிஐஜி ஏ.சரவணசுந்தர், எஸ்.பி சுஜித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

SCROLL FOR NEXT