திருப்பூர்: மத்திய அரசின் பட்ஜெட்டில் ஜவுளித்தொழில் மேன்மை பெற எந்த அறிவிப்பும் பெரிய அளவில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் (டீமா) முத்துரத்தினம் தெரிவித்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து திருப்பூர் தொழில்துறையினர் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் ஏ.சக்திவேல்: சர்வதேச நிறுவனங்கள் கணித்தபடி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது.
உள்கட்டமைப்பு முதலீட்டை ஊக்குவிக்க மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன், ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச மூலதன செலவு, துறைமுகம், நிலக்கரி, எஃகு ஆகியவற்றில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் உட்பட முதலீட்டை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன்: அனைத்து வகையான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக ரூ.300 கோடி இருப்பதால் சிறு, குறு, நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) ஏ.சி.ஈஸ்வரன்: அதிக பருத்தி விளைச்சலுக்கும், சந்தைப்படுத்தலுக்கும் ஆலோசனைகளுக்கும் விவசாயிகள், தொழில் துறையினரை இணைத்து குழு அமைக்க வேண்டும். டிஜிட்டல் லாக்கர் என்ற முறையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் தொடர்புடைய ஆவணங்கள் பார்வைக்கு உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். நாட்டின் பட்ஜெட்டை வலுவான பொருளாதார நிலை கொண்ட நாடாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்ற அம்சங்களுடன் வெளிவந்த பட்ஜெட் வரவேற்கத் தக்கது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் (டீமா) முத்துரத்தினம்: மத்திய பட்ஜெட்டில், பல்வேறு நல்ல விஷயங்களை அரசு அறிவித்துள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள ஜவுளித்தொழில் மேன்மை பெற எந்த அறிவிப்பும் பெரிய அளவில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இதற்கு காரணம் நம் தொழில்துறை சார்ந்த அமைப்புகளின் தேவைகளை மத்திய அரசுக்கு குறிப்பாக, நிதித்துறை அமைச்சகத்துக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.