தமிழகம்

தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை கண்டித்து ஓட்டல்களும், ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி மருந்து வணிகர்களும் இன்று (மே 30) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஓட்டல்கள் வேலைநிறுத்தம் குறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு இதுவரை 0.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் ஓட்டல்களுக்கான வரி 2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6 மடங்கு உயர்ந்து 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி கொண்ட ஓட்டல்களுக்கு 8 சதவீதமாக இருந்த வரி, தற்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய வரி உயர்வு அமலானால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப் படுவார்கள்.

மத்திய அரசிடம் வரியை உயர்த்தக் கூடாது என கோரிக்கை மனு அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த வரி உயர்வை எதிர்த்து நாளை (மே 30) ஓட்டல்களை அடைத்து போராட்டம் நடத்தவுள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்பார்கள். சாதாரண ஓட்டல்கள் அனைத்துக்கும் 5 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கக் கூடாது. ஏசி வசதி கொண்ட ஓட்டல்களில் 12 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை. எனவே, எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

40 ஆயிரம் மருந்து கடைகள்

ஆன்லைனில் மருந்து விற் பனையை மத்திய அரசு அனுமதிக் கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் 9 லட்சம் மருந்துக் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 40 ஆயிரம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக சென்னை எழும்பூரில் சுகாதாரத்துறை அமைச் சர் சி.விஜயபாஸ்கர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “மருந் துக் கடைகள் மூடப்படுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்து வணிகர்கள் எங்களுடைய வேண்டுகோளை ஏற்று மாலை 4 மணிக்கு கடைகளை திறப்பதாகவும், அவசர தேவைக்கு கடைகளை திறந்து மருந்துகளை கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். கூட்டுறவு மருந்தகங்கள், அம்மா மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஓட்டல் உரிமையாளர்களும், சுமார் 40 ஆயிரம் மருந்துக் கடை உரிமையாளர்களும் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT