பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். படம்: ம.பிரபு 
தமிழகம்

பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதி நேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ.10,000 மாத சம்பளமாக தரப்படுகிறது.

இந்நிலையில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளடிபிஐ வளாகத்தில் நேற்று தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகதேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஹேமா கூறும்போது, ‘‘கடந்த 11 ஆண்டுகளாக பணிநிரந்தரம் கோரி பல்வேறு போராட்டங்களை முன்வைத்து வருகிறோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அறிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதேபோல், மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 20-க்கும் மேற்பட்டோரும் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி டிபிஐவளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டிபிஐ வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT