தமிழகம்

டெண்டர் அறிவிப்பாணை விவகாரம் | சென்னை மாநகராட்சி மண்டல அலுவலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மணலியைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்ததாரரான மகாதேவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``சென்னை மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட அரியலூர் பகுதியில் தொடக்கப் பள்ளி வகுப்பறைகள் மற்றும் மின்சாதன வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான டெண்டர் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஜன.25-ம்தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க பிப்.2-ம் தேதி பிற்பகல்3 மணி வரை காலக்கெடு விதித்தும், பிப்.3-ம் தேதி டெண்டர்இறுதி செய்யப்படும் எனவும் அதில்தெரிவிக்கப்பட்டிருந்தது. ரூ.25லட்சத்துக்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் இந்த இ-டெண்டரில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நானும் இந்த டெண்டரில் பங்கேற்க விண்ணப்பித்தேன். ஆனால் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் எனது இணையதள முகவரியைப் பதிவு செய்து கொடுக்காததால் என்னால் இந்த டெண்டரில் பங்கேற்க முடியவில்லை.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ``இந்த டெண்டரை யாருக்கு வழங்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதோ அவருக்கு மட்டுமே இணையதள முகவரி இந்த டெண்டருக்கான விண்ணப்பத்தில் பதிவு செய்து கொடுக்கப்படும்'' என்றனர்.

மேலும், டெண்டர் சட்டத்தின்படி ரூ. 2 கோடிக்கு குறைவான டெண்டருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து விண்ணப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல ரூ. 2 கோடிக்கு மேலான டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள்அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த டெண்டருக்கு 8 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தடெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அத்துடன் இது தமிழ்நாடு அரசின் வெளிப்படையான டெண்டர் சட்டத்துக்கு எதிரானது என்பதால் இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்.

இது தொடர்பாக அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். தகுதியான அனைத்து ஒப்பந்ததாரர்களையும் டெண்டரில் பங்கேற்க அனுமதித்து, அதன்பிறகு மற்றநடைமுறைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னைமாநகராட்சி தரப்பில் 2-வது மண்டல அலுவலரான கோவிந்தராஜும் நீதிமன்றத்துக்கு வருகைதந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனும், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கில் மாநகராட்சி மண்டல அலுவலருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நீதிபதி, இது தொடர்பாக வரும் பிப்.23 அன்று மீண்டும் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த டெண்டரை நிறுத்தி வைக்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT