சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், காவல் நிலைய இன்ஸ் பெக்டரின் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு குற்ற வழக்கு தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவரை கடந்த ஜனவரி 7-ம் தேதி நீலாங் கரை காவல் நிலைய போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத் தில் விசாரணைக்காக தங்க வைக்கப் பட்டிருந்த அந்த சிறுவன் மீது, துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அந்த சிறுவனின் கழுத்துப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.
குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 30 நாட்களுக்கும் மேல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன், அதன் பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இதற்கிடையே தனது மகனை போலீஸார் துன்புறுத்தியதாகவும், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தனது துப்பாக்கியால் தனது மகனை சுட்டதாகவும் கூறி சிறுவனின் தாயார் உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தனது மகன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற அந்த மனுவில் தாயார் கோரியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை இன்ஸ் பெக்டர் புஷ்பராஜ் மறுத்தார். தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது கை தவறி கீழே விழுந்ததாகவும், அப்போது துப்பாக்கிக் குண்டு வெடித்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதாகவும் புஷ்பராஜ் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர், சிறுவன் துப்பாக் கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர் பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் புலன் விசாரணை நடத்திட வேண்டும் என்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.), மனித உரிமை ஆணையம் மற்றும் சிறார் நீதி வாரியம் விசா ரணை நடத்தி வரும் நிலையில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடத் தேவை யில்லை என கருதுகிறோம்.
மேலும், சம்பவம் நடந்த அதே காவல் நிலையத்திலேயே இந்த சம்பவம் தொடர்பான புலன் விசாரணை நடைபெறக் கூடாது என கருதுகிறோம். ஆகவே, இந்த சம்பவம் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் புலன் விசாரணை நடத்திட வேண்டும். டி.எஸ்பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் இந்த புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தனது உத்தரவில் கூறியுள்ளனர்.