தமிழகம்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பாக்கு விற்பனையை தடுத்து நிறுத்துக: ராமதாஸ்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பாக்கு விற்பனையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட அறிக்கையில், ''தமிழகத்தில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் மட்டும் தமிழகம் முழுவதும் தடையின்றி கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

மதுவுக்கு சற்றும் சளைக்காத வகையில் போதைப் பாக்குகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும் அதன் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை சார்பில் 'தமிழ்நாடு புகையிலைப் பயன்பாட்டு ஆய்வு 2015-16 என்ற தலைப்பிலான ஆய்வின் முடிவுகள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் 32,945 வீடுகளில் உள்ள 1.11 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் மூலம் தமிழகத்தில் 15 வயதைக் கடந்தவர்களில் 28.64 லட்சம் பேர் ஏதோ ஒரு வகையில் புகையிலையை பயன்படுத்துகின்றனர் என்றும், புகையிலையை பயன்படுத்துபவர்களில் நான்கில் ஒரு பங்கினர் 18 வயதுக்கு முன்பே புகையிலையை பயன்படுத்தத் தொடங்கியவர்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

போதைப் பாக்குகள் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதேபோல் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் கணக்கிட முடியாதவை ஆகும். 2011-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகளின் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ஆகும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.16% ஆகும். புகையிலையால் ஏற்படும் உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு தவிர்க்கக் கூடியவை ஆகும்.

அதனால் தான் பாமகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது போதைப் பாக்குகளை தடை செய்யும் வகையில் உணவுப் பொருட்கள் தரச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதனடிப்படையில் தமிழகத்தில் போதைப் பாக்குகளை தடை செய்ய வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி தொடர்ந்து பலமுறை வலியுறுத்திய பிறகே 2013 ஆம் ஆண்டு மே மாதம் இந்த தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும், இந்தத் தடையை தமிழக ஆட்சியாளர்கள் முறையாக நடைமுறைப்படுத்தாததால் தமிழகம் முழுவதும் போதைப் பாக்குகள் தடையின்றி கிடைக்கின்றன. 2013-ஆம் ஆண்டுக்கும் இப்போதைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் முன்பிருந்ததைவிட இப்போது இரு மடங்குக்கும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பது தான்.

இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தில் பெருக்கெடுத்துள்ள ஊழல் தான்.சென்னை புழல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் குட்கா தயாரிப்பு ஆலைகள் தடையின்றி இயங்கி வந்துள்ளன. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் மெல்லும் புகையிலையை உற்பத்தி செய்யும் நான்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. போதைப் பாக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக சென்னை மாநகர காவல் ஆணையர்கள் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் லஞ்சம் தரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அவர் மூலமாக ஆட்சி மேலிடத்திற்கும் கோடிக்கணக்கில் பணம் தரப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.

போதைப் பாக்குகள் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மாவட்டம் என்ற அவப்பெயர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. அந்த மாவட்டத்தில் போதைப் பாக்கு பயன்பாடு 19.9% என்ற அளவில் உள்ளது. இதற்குக் காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 போதைப் பாக்கு ஆலைகள் செயல்பட்டு வருவதும், அம்மாவட்டத்தில் போதைப் பாக்குகள் மிகவும் தாராளமாக கிடைப்பதும் தான். இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் போதைப் பாக்குகளை ஒழிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இந்த அவல நிலை நிலவுவது தான்.

புகையிலை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் மருத்துவர் அன்புமணி ஏராளமான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தினால் சாதகமான விளைவுகள் ஏற்படும் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி வந்தவர்களில் 61.3 விழுக்காட்டினர் அவற்றின் உறைகளில் அச்சிடப்பட்டிருந்த எச்சரிக்கைப் படங்களைப் பார்த்து புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்டு விட்டதாகக் கூறியுள்ளனர்.

பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை, பொது இடங்களில் எச்சில் உமிழத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் செயல்படுத்தினால் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஊழலில் ஊறித் திளைக்கும் அரசு இதுபோன்ற நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்த மறுக்கிறது.

போதைப் பாக்கு மட்டுமின்றி, கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்தே இந்த வணிகம் நடக்கிறது. இதுகுறித்த அனைத்துத் தகவல்களும் காவல்துறையினருக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும் இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் மாணவ சமுதாயம் தொடர்ந்து சீரழிகிறது.

இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் போதைப் பாக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி நிறுவன வளாகங்கள் உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பிற போதைப் பொருட்கள் விற்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

காவல்துறையில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு, மதுவிலக்குப் பிரிவு ஆகியவை இருந்தும் இளைய தலைமுறையை சீரழிக்கும் போதைப் பொருட்களின் விற்பனை கட்டுப்படுத்தப்படாத நிலையில், போதைப் பொருட்கள் மற்றும் பாக்குகள் விற்பனையை தடுப்பதற்காக நேர்மையான அதிகாரி ஒருவர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT