தமிழகம்

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் இயக்குநரை நியமிக்க முடிவு: டாக்டர்கள் கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை அண்ணாசாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் இயக்குநரை நியமிப்பதற்கு அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி திறக்கப்பட்டது. இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்பு பிரிவுகளோடு சுமார் 400 படுக்கை வசதிகளுடன் இம்மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனை தொடங்கியதில் இருந்தே இதுவரை நிரந்தரமாக இயக்குநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பில் மட்டுமே இயக்குநர் நியமிக்கப்பட்டனர்.

அதிக ஊதியம்

இந்நிலையில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், “அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்குநர் தேர்வு செய்யப்பட உள்ளார். மாத ஊதியம் ரூ.2.50 லட்சம். அதிகபட்ச வயது வரம்பு 65. மருத்துவப் பட்ட மேற்படிப்புடன் 10 முதல் 15 ஆண்டுகள் வரை முதுநிலை டாக்டராக பணியாற்றி இருக்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் டீன், மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மே மாதம் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்த அடிப்படையிலான இயக்குநர் பொறுப்புக்கு18 பேர் விண்ணப்பித்து இருப்பதாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டாக்டர்கள் எதிர்ப்பு

இதற்கிடையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2.5 லட்சம் ஊதியத்தில் இயக்குநர் நியமிப்பதற்கு அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செந்தில், அரசு மருத்துவர் கள் மற்றும் அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:

தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் 8 மருத்துவமனைகள் உள்ளன. இவை அனைத்தையும் டீன் ஒருவர்தான் நிர்வகித்து வருகிறார். தமிழகத்தில் உள்ள 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் மருத்துவக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ளன. டீனுக்கும், மருத்துவக்கல்வி இயக்குநருக்கும் மாத ஊதியம் ரூ.1.50 லட்சத்துக்குள்தான் இருக்கிறது. 300 நோயாளிகள் கூட உள்நோயாளிகளாக சிகிச்சை பெறாத அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இயக்குநருக்கு மாத ஊதியம் ரூ.2.50 லட்சம். இது என்ன நியாயம்.

இந்த பொறுப்புக்கு அரசு பணியில் உள்ள டாக்டர்கள் யாரும் விண்ணப்பிக்க மாட்டார்கள். ஓய்வு பெற்ற டீன்கள், மருத்துவக் கல்வி இயக்குநர்கள்தான் விண்ணப்பித்து இருப்பார்கள். ஒப்பந்த அடிப்படையில் இயக்குநரை நியமிக்கக் கூடாது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றிவரும் டீன் ஒருவரை நிரந்தர இயக்கு நராகவோ டீனாகவோ அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும்.

இந்த பொறுப்புக்கு அரசு பணியில் உள்ள டாக்டர்கள் யாரும் விண்ணப்பிக்க மாட்டார்கள். ஓய்வு பெற்ற டீன்கள், மருத்துவக் கல்வி இயக்குநர்கள்தான் விண்ணப்பித்து இருப்பார்கள். ஒப்பந்த அடிப்படையில் இயக்குநரை நியமிக்கக் கூடாது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றிவரும் டீன் ஒருவரை நிரந்தர இயக்கு நராகவோ டீனாகவோ அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

          
SCROLL FOR NEXT