வேலூர்: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக இன்று வேலூர் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் 5,351 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ரயில் மூலம் இன்று பகல் 12 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வரும் முதல்வருக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அங்கிருந்து கார் மூலம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் அவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 196 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,351 புதிய வகுப்பறைகள் கட்டும் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார். இதில், வேலூர் மாவட்டத்தில் ரூ.15.96 கோடி மதிப்பில் 114 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் திட்டம் அடங்கும்.
வேலூர் விஐடி பல்கலைக் கழகம் அண்ணா அரங்கில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர், புதிய கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார். பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொலி கூட்டரங்கில் தோல் தொழிலதிபர்கள், விவசாயிகள், வணிகர்கள், பேருந்து, லாரி உரிமையாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
தொடர்ந்து, முதல்வர் தலைமையில் வேலூர் சரக மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு ஆய்வு நடைபெறவுள்ளது. வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை அரசு அலுவலகம் ஏதாவது ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொள்வார் என தெரிகிறது.
பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். இதில், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டுக்குச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிய உணவுக்குப் பிறகு ரயில் மூலம் சென்னை புறப்படுகிறார்.