கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கத்தால், மாமரங்களில் பூக்களைத் தொடர்ந்து பிஞ்சுகளும் உதிர்ந்து வருகின்றன. இதனால், மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. நிகழாண்டில் மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்திருந்தது. ஆனால், டிசம்பர்முதல் தற்போது வரை பனியின்தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மா மரங்களில் பூக்கள் கருகி உதிர்ந்தன. மேலும், பூச்சித் தாக்குதல் அதிகரித்தது. தற்போது, பிஞ்சுகளும் உதிர்ந்து வருகிறது. இதனால், உற்பத்தி பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக சந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதாசிவம் கூறியதாவது: மாமரங்களில் பூக்கள் நன்றாகப் பூத்திருந்த நிலையில் பனியால் கருகி உதிர்ந்தன. வழக்கமாக இருமுறை மருந்து தெளித்தால், பூக்கள் கருகுவது குறையும். ஆனால், 3 முறை மருந்து தெளித்தும் பூக்கள் உதிர்வதும், கருகுவதும் குறைவில்லை. தற்போது, பிஞ்சுகளும் உதிர்ந்து வருகிறது. இதை தடுக்க தரமான மருந்தை அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தோட்டக்கலைத் துறை அறிவுரை - இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கூறியதாவது: மா மரங்கள் பூக்கும் நிலையில் பூக்களைத் தாக்கும் தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் உதிர்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த, ‘தைமீத்தோஸாம்’ 0.20 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். பூச்சிகளைத் தொடர்ந்து சாம்பல் நோய், பழ அழுகல் மற்றும் நுனி தண்டு அழுகல் நோய் போன்ற நோய்கள் பூக்காம்பு, பூக்கள் மற்றும் இளம் பிஞ்சுகளைத் தாக்கும். இதனால், பூக்கள் கருகி காய்பிடிப்புத் திறன் குறைந்து அதிகப்படியான மகசூல் இழப்பு ஏற்படும்.
இதைக் கட்டுப்படுத்த, ‘கார்பன்டாசிம்’ 1 மில்லியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகளுக்கு பயிற்சி: ஆட்சியர் - கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறியதாவது: பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து மா மகசூலைப் பாதுகாக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 6 தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை (2-ம் தேதி) முதல் 10-ம் தேதி வரை விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இதில், விவசாயிகள் பங்கேற்றுப் பயன்பெறலாம். மேலும், விவரங்கள் அறிய அந்தந்தப் பகுதி தோட்டக் கலைத் துறை வட்டார அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.