சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் 93 வயதுமுதியவருடன் மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி, மருத்துவ குழுவினர். 
தமிழகம்

ஓமந்தூரார் மருத்துவமனையில் மறுவாழ்வு: கரோனா பாதித்த 93 வயது முதியவர் குணமடைந்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (93). ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த 14-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் குணமடைந்த முதியவர் மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பினார்.

இது தொடர்பாக மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி கூறியதாவது: தனியார் மருத்துவமனையிலிருந்து மூச்சுத்திணறலுடன், செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு சீனிவாசன் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரலில் கரோனா தொற்று 40 சதவீதத்துக்கு அதிகமாகவும், இதய நோய் பாதிப்பும் இருந்தது. பொது மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் ஷர்மிளா, பிரியதர்ஷினி, சாய்லட்சுமிகாந்த், திவ்யபிரியா, நிவேதா, சவுமியா ஆகியோர் அடங்கிய குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவர் குணமடைந்தார்.

இந்த மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 90 வயதுக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 95 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT