சென்னை: சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு மணல் லாரிகள் இயக்கப்படாது என அனைத்துஎம்.சாண்ட் மற்றும் மணல் லாரிஉரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது: பெருமளவு சாலை விபத்துகளும், உயிர் சேதங்களும் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துகளைக் குறைப்பதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு லாரி உரிமையாளர்களுக்கும் இருக்கிறது என்பதை பறைசாற்றும் வகையில் இன்று (பிப்.1) முதல் நாங்கள் எங்களது வாகனங்களில் அதிக பாரம் ஏற்ற மாட்டோம் என தாமாகமுன்வந்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பிப்.1 முதல் பிப்.3-ம் தேதி வரை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.
அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லாரிகள் இயக்கப்படாது. இந்த விவகாரத்தில் அரசு தனி கவனம் செலுத்தும் வகையில் சிறப்புக் குழு அமைத்து, அதிக பாரம் ஏற்றுவதன் மூலம் நடக்கும் விபத்துகளைத் தடுத்து, இதற்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வரும்28-ம் தேதிக்குள் அரசு பரிசீலிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருப்பதுபோல் மின்னணு முறையில் பாரம் ஏற்றுவதற்கான ரசீது வழங்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தினால் அதிக பாரம்என்ற பிரச்சினை முற்றிலும் தடுக்கப்படும். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கை மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.