நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் எதிரே அபிராமி அம்மன் சன்னதி திடலில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அமிர்த ராஜா தலைமையில் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படம் நேற்று முன்தினம் இரவு திரையிடப்பட்டது.
இதை, பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளான கூடி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் அங்கு சென்று, ஆவணப் படத்தைத் திரையிடக் கூடாது என கூறினர். இதனால், இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மோதலாக மாறும் சூழ்நிலை உருவானதால், ஆவணப் படம் திரையிடல் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் அதிகமான போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இரு கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.