தமிழகம்

நெல்லை மாநகராட்சி வளாகத்தில் திமுகவில் இரு தரப்பினர் மோதல்: வெட்டவெளிச்சமாகும் உட்கட்சி பூசல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர் கள் மற்றும் அக்கட்சி பிரமுகர்கள் இருபிரிவாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 உறுப் பினர்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 4 பேர் மட்டும் அதிமுக உறுப்பினர்கள். அதிக பெரும்பான்மையுடன் மாநகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில், மேயராக 14- வது வார்டு திமுக உறுப்பினர் பி.எம். சரவணன், துணை மேயராக 1-வது வார்டு திமுக உறுப்பினர் ராஜூ பதவியேற்று பணியாற்றுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மேயர் ஆதரவு, எதிர்ப்பு என இரு பிரிவாக திமுக உறுப்பினர்கள் பிரிந்து மாமன்ற கூட்டம் நடைபெறும் போதெல்லாம் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். மேயருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பினர் முன்வைத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்திலும் திமுக உறுப்பினர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் சிலர் மேயர் அறையில் அமர்ந்து கொண்டு ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி வருவதாக மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே குற்றம்சாட்டினர். இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. வழக்கமாக மேயர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம், நேற்று ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி அறையில் நடைபெற்றது.

மேயர் பங்கேற்கவில்லை. அப்போது திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் பாளையங்கோட்டை திமுக பகுதி செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டார், மாநகர திமுக அலுவலகம் அமைந்துள்ள 27-வது வார்டு பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர்.

அலுவலகத்தின் முதல் தளத்தில் ஆணையரை சந்தித்து விட்டு கீழே தரைத்தளத்துக்கு வந்தபோது, அங்கு குழுமியிருந்த எதிர்த்தரப்பு திமுக கவுன்சிலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாட்ஸ்அப் குழுக்களில் திமுக மாமன்ற உறுப்பினர்களை தவறாக சித்தரித்து கருத்துகள் வெளியிடுவது தொடர்பாகவும், உட்கட்சி பூசல் தொடர்பாகவும் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாநகராட்சி ஆணையர் அங்கு வந்து இரு தரப்பினரையும் கண்டித்து வெளியேறும்படி கூறினார். “இது அரசு அலுவலகம், கட்சி பிரச்சினைகளை வெளியே வைத்துக்கொள்ளுங்கள்” என்று அவர் கோபத்துடன் கூறினார். அதன்பின் திமுகவினர் கலைந்து சென்றனர்.

இதனிடையே மேலப்பாளையம் மண்டலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக திமுகவைச் சேர்ந்த இருவர் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட திமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் பொது இடங்களிலும் வெட்டவெளிச்சமாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT