கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்ப்பட்ட அரசு உதவிப் பெறும் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியின் பின்புறமுள்ள திருநாராயணபுரம் சாலையில், அண்மைக்காலமாக கழிவு நீர் செல்லும் பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைத்து கொண்டுள்ளது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர், புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதி, அப்பள்ளி நிகழ்ச்சிக்குச் சென்ற எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனிடம், அதே பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவர் ஆ.ஆல்வீன் மற்றும் எஸ்.ரித்திஷ்ராஜ் ஆகியோர், தங்களிடமிருந்த தாளில், ‘சாக்கடை வழிந்து ஒடுவதை யாரும் அகற்ற முன்வரவில்லை’ எனப் புகார் மனுவாக எழுதி, அவரிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை, அந்த இடத்திற்கு சென்ற எம்எல்ஏ, பள்ளி மாணவர்களின் நலன் கருதி உடனடியாக, அந்த இடத்தில் கழிவு நீர் வெளியேறாத வகையில் நிரந்தரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இதேபோல், பெரியக் கடைத்தெருவிலுள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல்களில் அடைப்பு ஏற்பட்டு, தெப்பம் போல் கழிவு நீர் தேங்கி நிற்பதாக, எம்எல்ஏவிடம் அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் புகாரளித்தனர். உடனடியாக அங்குச் சென்ற அவர், இயந்திரம் மூலம் நிரந்தரமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்து, அந்த இயந்திரம் வந்து பணிகள் தொடங்கும் வரை அங்கேயே 30 நிமிடம் காத்திருந்தார். பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு இயந்திரம் வந்து பணிகள் தொடங்கியதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் இருந்த மாநகராட்சி ஆணையர் ம.செந்தில்முருகன் கூறும்போது, ”கும்பகோணம் பெரியக் கடைத்தெருவில் மண் மற்றும் பல்வேறு கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் தேங்கியது. அதனைச் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, நேற்று இரவு முடிந்தவுடன், திருநாராயணபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் நிரந்தரமாக அகற்றி சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று இரவுக்குள் பணிகள் முடிந்துவிடும்” எனத் தெரிவித்தார்.