சென்னை: பள்ளிக்கரணையில் இயங்கிவரும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை சார்பில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் தடுப்பூசிகளைச் செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் இது நடத்தப்பட்டது.
இப்பேரணியை காவல் துறை கூடுதல் இணை ஆணையர் அனந்தகுமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனைகள் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன், இயக்குநர்கள் டாக்டர் ஜெயந்தி, டாக்டர் டி.ஜி.சிவரஞ்சினி, ஆலோசகர் டாக்டர் கே.எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன் பேசும்போது, “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலக அளவில் இந்நோய் பாதித்த 4-ல் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் உள்ளனர். சிறு வயது திருமணம், சிறு வயது தாம்பத்தியம் உள்ளிட்ட காரணங்களால்தான் இந்நோய் ஏற்படுவதாக ஹெச்.பி.வி. தடுப்பூசி ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே, “தகவலை தெரிந்து கொள்ளுங்கள், பரிசோதனை செய்து கொள்ளுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்’ என்ற வாசகம் இந்த ஆண்டின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தின கருத்தாக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இயக்குநர் டாக்டர் டி.ஜி.சிவரஞ்சினி பேசும்போது, “புற்றுநோய்களிலேயே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்தான் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் வெற்றிகரமாகக் குணப்படுத்தக் கூடிய புற்றுநோயாக உள்ளது. முற்றிய நிலையில் கண்டறியப்பட்டாலும் முறையான சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
9 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு 6 மாத இடைவெளியில் இருமுறை ஹெச்.பி.வி. தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டால் இந்நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்” என்றார்.