திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள், பேருந்து நிலைய கடைகள் ஏலம் குறித்து திமுக கவுன்சிலர்களுடன் பாஜக, அதிமுக கவுன்சிலர்கள் கடும் விவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பாஜக, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியவுடன் முன்னாள் நகராட்சித் தலைவர் பஷீர் அகமது, முன்னாள் கவுன்சிலர் பிரான்சிஸ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: பாஸ்கரன்(அதிமுக): எனது வார்டு பகுதியில் பணிகள் மேற்கொள்ளும்போது வார்டு கவுன்சிலர் என்ற முறையில் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை. பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்றால் திமுகவினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்களை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை.
பாலம் கட்டுதல் மற்றும் சாலை அமைக்கும் பணிகளில் முன்கூட்டியே பணி செய்துவிட்டு நிதி ஒதுக்கீடு செய்கிறீர்கள். பணிகள் தரம் இல்லாமல் செய்யப்படுகிறது. தரமற்ற சாலைகள் அமைத்ததால் மீண்டும் சேதம் அடைந்துள்ளது. மேயர்: தேவையில்லாத பணிகள் எதுவும் செய்யவில்லை. மக்கள் கோரிக்கையை ஏற்றுத்தான் பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தனபாலன்(பாஜக) பேருந்து நிலைய கடைகள் முறையாக ஏலம் விடப்படவில்லை. எனவே, ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். கார்த்திகேயன் (காங்கிரஸ்): பேருந்து நிலைய கடைகள் எனது வார்டுக்குள் வருகிறது. எனவே, அதை நான் பேசிக்கொள்கிறேன். கடை ஏலம் விட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஜானகிராமன்(திமுக): பேருந்து நிலைய கடை பிரச்சினையில் அமைச்சர் ஐ.பெரியசாமியை தொடர்புபடுத்தி அவர் மீது அவதூறு பரப்பிய பாஜக கவுன்சிலர் தனபாலன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனந்தன் (திமுக): அமைச்சர் குறித்து தவறான தகவல் பரப்பிய பாஜக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையடுத்து அனைத்து திமுக கவுன்சிலர்களும் எழுந்து, பாஜக கவுன்சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர். தனபாலன் (பாஜக): அமைச்சர் குறித்து நான் அவதூறு கருத்து தெரிவிக்கவில்லை. ஆணையாளர் சொன்னதை தான் தெரிவித்தேன். பேருந்து நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது.
ஏலத்தை ரத்து செய்து மீண்டும் ஏலம் விட வேண்டும். முறைகேடாக ஏலம் விடப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன். இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவது குறித்த விவரங்களை தெரிவிப்பதில்லை எனக் கூறி, அதை கண்டித்து மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
வெளியில் வந்த பாஜக, அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திமுகவினரை கண்டித்து கோஷமிட்டனர். இதையறிந்து அங்கு வந்த திமுகவினர் பாஜக, அதிமுகவினருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது போலீஸார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். முன்னதாக மாநகராட்சிக் கூட்டத்தில் 216 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுகவினரை விஞ்சிய மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள்: மேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்ட அரங்குக்கு அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். தற்செயலாக கருப்பு சட்டை அணிந்து வந்த மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஜோதிபாசு இதை எதிர்பார்க்காததால், வேகமாக சென்று அருகிலுள்ள கடையில் வெள்ளை சட்டை வாங்கி வந்து அணிந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில், பாஜக கவுன்சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களைவிட சத்தமாக மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் ஜோதிபாசு, கணேசன் ஆகியோர் கோஷமிட்டனர். இதைப் பார்த்து திமுக கவுன்சிலர்களே ஆச்சரியமடைந்தனர்.