ஈரோடு: என் மகன் விட்டுச்சென்ற பணியைத் தொடர விரும்புகிறேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவையடுத்து, வரும் 27-ம் தேதி, இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த எஸ்டிபிஐ கட்சி, தனது முடிவை மாற்றிக் கொண்டு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேற்று அறிவித்தது. அக்கட்சியின் நிர்வாகிகள், ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து ஆதரவினைத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்குப்பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில், நான் கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். அதை, வெட்டியும் ஒட்டியும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை.
எனது தாத்தா பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும், என் தந்தை சம்பத் எம்பியாகவும், எனது மகன் திருமகன் எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்து ஈரோட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றியுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்வதற்காகத் தான் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன், என்றார்.