வேலூர் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுஜாதா தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அருகில், துணை மேயர் சுனில்குமார், ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர்.படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

முதல்வர் ஸ்டாலினின் திடீர் ஆய்வுக்காக தயாராகும் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாநகரில் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதால் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆணையர் அசோக்குமார், துணை மேயர் சுனில்குமார் மற்றும் மண்டல குழு தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘முதல்வர் இரண்டு நாள் வருகையால் மாநகராட்சி அதிகாரிகள் தயாராக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மண்டலம் 2 மற்றும் 3 பகுதியில் மாடுகள் சாலையில் திரிந்தால் அவற்றை பறிமுதல் செய்து ஏலத்தில் விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சாலையோரங்களில் மண் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். குடிநீர் விநியோகம் தடையில்லாமல் இருக்க வேண்டும். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து அனைத்து விவரங்களையும் அதிகாரிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். அது தொடர்பான ஆவணங்களை கூடுதல் நகல்களுடன் வைத்திருக்க வேண்டும்.

முதல்வர் திடீரென எந்த பகுதியிலும் ஆய்வு செய்யலாம் என்பதால் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT