சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் 
தமிழகம்

ஏரியா சபை உறுப்பினர்கள் பட்டியலுக்கு அனுமதி முதல் கவுன்சிலர் மயக்கம் வரை: சென்னை மாநகராட்சி கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் 

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: ஏரியா சபை உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்து, வார்டு வாரியாக உதவிப் பொறியாளர்களை ஏரியா சபைகளுக்கு செயலாளராக நியமித்து அவற்றை நடத்துவதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று (ஜன.30 ) நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏரியா சபை உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி, வார்டு வாரியாக உதவிப் பொறியாளர்களை செயலாளராக நியமித்து ஏரியா சபைகளை நடத்துவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்றும் மூன்று நட்சத்திரக் குறியீடு பெறுவதற்கான இறுதி தீர்மானம், இணைய வழியில் கட்டிட வரைபடம் ஆய்வு செய்வதற்கான மென்பொருளை வாங்குதல், பேட்டரி வாகனங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5வது வார்டு உறுப்பினர் கேபி சொக்கலிங்கம்,"சென்னைக்கு வரும் வட இந்தியர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மாநகராட்சி கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆளுநருக்கு எதிராக சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

அண்மையில் அண்ணாசாலை நிகழ்வை குறிப்பிட்டு பேசிய மேயர் பிரியா, இனிவரும் காலங்களில் தனியார் இடமாக இருந்தாலும் கட்டிடம் இடிக்கும் போது அந்தப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று உறுதி அளித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் என்றும் கவுன்சிலர்களுக்கு ஊதியம் தொடர்பாக நல்ல செய்தி வரும் என்றும் மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கிய மாமன்ற கூட்டம் உணவு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இரண்டு மணிக்கு மேல் வரை நடந்து வந்த நிலையில் 14 வது திமுக மாமன்ற உறுப்பினர் பானுமதி திடீரென மயக்கமடைந்தார். அவருக்கு செவிலியர் மூலம் உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து மன்ற தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டத்தை அவசரமாக முடித்து வைத்தார் மேயர் பிரியா.

SCROLL FOR NEXT