கோப்புப்படம் 
தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: பிப்.1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, திங்கட்கிழமை காலை (ஜன.30) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நேற்று (ஜன.29) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஜன.30) காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது 31.01.2023 மாலை வரை மேற்கு - வடமேற்கு திசையிலும், அதன்பிறகு மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1-ம் தேதியன்று காலை இலங்கை கடற்பகுதிகளைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31-ஆம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்ரவரி 1-ஆம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2-ஆம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3-ம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியல் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஜனவரி 30-ஆம் தேதி, இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜனவரி 31-ஆம் தேதி, இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பிப்ரவரி 1-ஆம் தேதி, இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பிப்ரவரி 2-ஆம் தேதி, இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT