உச்சநீதிமன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான இபிஎஸ் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 

செய்திப்பிரிவு

டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், இபிஎஸ் தரப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது இந்த கோரிக்கை குறித்து தெரிவித்துவிட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். அப்போது இபிஎஸ் தரப்பில், "இதுதொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டோம்" என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வரும் திங்கட்கிழமை மீண்டும் முறையிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதன்படி உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.30) எடப்பாடி பழனிசாமி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த மனு தொடர்பான விவரங்களை ஓபிஎஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த மனு மீது தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மீதான விசாரணை மட்டுமே நடைபெறுமே தவிர அதைத் தாண்டி வேறு எந்த ஒரு விவகாரத்திற்குள்ளும் நாங்கள் செல்ல மாட்டோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT