தஞ்சாவூர் அருகே குடியிருப்புகள் மத்தியில் உள்ள வீட்டில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரை அடுத்த சூரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட யாகப்பாசாவடி, அம்மாகுளம், கீழவஸ்தாசாவடி, நத்தம்பாடி பட்டி, கன்னித்தோப்பு பகுதிகளுக்கு மையத்தில் உள்ளது ஆனந்த் நகர். இப்பகுதியில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை, அருகில் குடியிருப்புகள் சூழ்ந்த ஆனந்த் நகரில் உள்ள வீடு ஒன்றில் திறந்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மதுக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்தனர். சூரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திலும், மதுக்கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று காலை அப்பகுதி பெண்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, டாஸ்மாக் மதுக்கடையாக செயல்பட்ட வீட்டின் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏடிஎஸ்பி கண்ணன், வல்லம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மதுக்கடையை அகற்றும் வரை முற்றுகை தொடரும் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.