தமிழகம்

அதிக மழைப்பொழிவால் குந்தா அணையில் கூடுதலாக 60 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்

ஆர்.டி.சிவசங்கர்

மஞ்சூர்: அதிக மழைப்பொழிவால் குந்தா அணையில் கூடுதலாக 60 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என்று நீலகிரி மாவட்டம் அழைக்கப்படுகிறது. சமவெளியில் பாயும் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் மாயாறு, பவானி ஆகிய இரண்டு ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன.

இதேபோல, 60 சதவீதத்துக்கும் அதிகமாக வனப்பகுதி இருப்பதால், ஆண்டில் சுமார் 94 நாட்கள் மழை பெய்து வருகிறது. அதாவது, மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் மூலமாக, ஆண்டுக்கு சுமார் 1,250 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டங்களின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலமாக 833.65 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்துக்கு 70 மெகா வாட் பயன்படுகிறது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம்முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் சராசரி மழை அளவு, வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு 40 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.

இதனால் குந்தா அணையில் கூடுதல் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து அணைகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைந்துள்ளதால், மாவட்டத்தில் சேகரமாகும் நீர் விரயமாகாமல் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது.

இதன் மூலமாக, குந்தா திட்டத்தின் கீழ் அவலாஞ்சி, பார்சன்ஸ்வேலி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் மூலமாக 585 மெகா வாட், பைக்காரா திட்டத்தின் கீழ் முக்குருத்தி, சிங்காரா, மரவக்கண்டி, மாயாறு மூலமாக 248 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், குந்தா அணையில் மட்டும் 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது, அணையில் 2 பவர் ஹவுஸ் கூடுதலாக நிறுவப்பட்டு, அதன்மூலமாக தலா 30 மெகா வாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது சில்லஹல்லா ஆறு மூலமாக, அவலாஞ்சி மற்றும் அவலாஞ்சியில் இருந்து குந்தா அணைக்கு கூடுதல் தண்ணீர் கொண்டு வந்தால் சாத்தியமாகும். இத்திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக 60 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டால், எதிர்கால மின்சார தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றனர்.

SCROLL FOR NEXT