நாமக்கல்: இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து, மல்லசமுத்திரம் அருகே கிராம மக்கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செண்பகமாதேவி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அண்ணமார் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில், அப்பிரிவினரிடையே கோயில் விழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு பிரிவு மக்கள் மட்டும் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்திருப்பதாகக் கூறி சிலர் கோயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.