சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான இரும்பு கேட். 
தமிழகம்

சென்னை | தந்தையை அழைக்க வந்தபோது சோகம்: வணிக வளாக இரும்பு கேட் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தந்தையை அழைக்க வந்தபோது, வணிக வளாகத்தின் இரும்பு கேட் சரிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார். சென்னை நம்மாழ்வார்பேட்டை, சிவகாமிபுரம் பரகா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). டிரைவரான இவர், கீழ்ப்பாக்கம், ஹார்லி சாலையில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஃபேப் இந்தியா என்ற ஜவுளிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்களை வாகனநிறுத்துமிடத்துக்குக் கொண்டு சென்று விட்டுவிட்டு, பின்னர் அந்தகார்களை எடுத்து வந்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் வேலையை செய்து வந்தார்.

தாயுடன் வந்த மகள்: பணி முடிந்ததும் கணவர் சங்கரை அழைத்துச் செல்ல மனைவி வாணி (30) தினமும் வணிக வளாகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வருவார். கூடவே மகள் ஹரிணி யும் (5) வருவார். பின்னர் 3 பேரும் ஒன்றாக வீடு திரும்புவது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வாணி, மகளுடன் ஜவுளிக் கடைக்கு வந்தார். இருவரும் சங்கரை எதிர்பார்த்து வணிக வளாகத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். வணிக வளாகத்தில் காவலாளி சம்பத் (65) வளாகத்தின் இரும்புக் கதவை பலமாக சாத்தினார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இரும்புக் கதவு திடீரென சரிந்து கீழே விழுந்தது.

இதில் சிறுமி ஹரிணி, சிக்கிக்கொண்டு வலியால் துடித்தார். இதைச் சற்றும் எதிர்பாராத தாய்வாணி அதிர்ச்சியில் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு இரும்புகேட்டை தூக்கி, அதற்குள் சிக்கியிருந்த சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.15 மணியளவில் சிறுமி ஹரிணி  இறந்தார். அவரைக் கட்டி யணைத்து தந்தையும், தாயும் கதறி அழுதனர். இந்த காட்சிகள் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக காவலாளிசம்பத், மேலாளர் சீனிவாசன் ஆகியஇருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஹரிணி ஸ்ரீ

விபத்து நடந்தது எப்படி? - ஹரிணி ஸ்ரீ வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை சங்கர் இந்த ஜவுளிக்கடையில் 20 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். சிறுமி தினமும் ஜவுளிக்கடைக்கு வருவதால், வணிக வளாக காவலாளி சம்பத்துடன் பாசமாகப்பழகியுள்ளார். அங்கு இருக்கும்போது, காவலாளியிடமே சிறுமி அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

கராத்தே, நடனம்: சம்பவத்தன்று சிறுமியின் தாய் வாணி, இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்துள்ளார். அதைப் பார்த்த காவலாளி சம்பத், சிறுமி ஹரிணி கேட்டை தாண்டி வெளியே சென்றுவிட்டார் என நினைத்து இரும்பு கேட்டை பூட்ட வேகமாகத் தள்ளியுள்ளார். அப்போதுதான் எதிர்பாராத விதமாக கேட் சரிந்து விழுந்துள்ளதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி ஹரிணி, கராத்தே மற்றும்நடனத்தில் அதிக ஆர்வமுடன் இருந்ததால், அயனாவரம் பகுதியில் பயிற்சி வகுப்புக்கு பெற்றோர் அனுப்பி வைத்து செல்லமாக வளர்த்து வந்ததாக அவரது குடும்பத்தினர் உருக்கமுடன் கூறினர்.

SCROLL FOR NEXT