"அதிமுக பிரமுகர்கள் சார்பில் வெளியிடப்படவுள்ள 2017 காலண்டரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்குப் பதிலாக சசிகலாவின் படமே இருக்குமாம்"
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த துக்கத்தை மாநிலமே அனுசரித்துவரும் நிலையில், அவரது மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சியால் தொண்டர்கள் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் இன்னொரு தகவலும் பரபரப்பாக உலா வந்துகொண்டிருக்கிறது. அது 2017 காலண்டர் தொடர்பானது.
தமிழக அமைச்சர்கள் சிலரும், இந்நாள் எம்.எல்.ஏ-க்களும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் ஜெயலலிதா உருவப்படத்துடன் 2017-ம் ஆண்டு காலண்டர் அச்சடிக்க முன்வைத்த ஆர்டர்களை அவசர அவசரமாக ரத்து செய்துள்ளனர் என்பதே அது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அச்சக உரிமையாளர் ஒருவர் 'தி இந்து' நாளிதழிடம் (ஆங்கிலம்) கூறும்போது, "டிசம்பர் 6-ம் தேதி இரவு அதிமுக பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் கவுன்சிலர்கள் எனப் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். ஏற்கெனவே கூறியிருந்தபடி ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் காலண்டர்களை அச்சடிக்க வேண்டாம் என்றனர்.
ஜெயலலிதா உருவப்படத்துடன் 25,000 காலண்டர்கள் அச்சடித்துத் தருமாறு கோரப்பட்டிருந்தது. நவம்பர் இறுதி வாரத்திலும் டிசம்பர் முதல் வாரத்திலும் அந்த ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால், டிசம்பர் 6-ல் பெரும்பாலான அதிமுக பிரமுகர்கள் அச்சுப் பணியை நிறுத்துமாறு கூறிவிட்டனர்.
அவர்கள் சொல்வதற்கு முன்பாகவே பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெரிய புகைப்படம் கொண்ட காலண்டர் அட்டைகள் தயாராகிவிட்டன. கிட்டத்தட்ட முழுவேலையும் முடிந்துவிட்ட நிலையில்தான் எங்களுக்கு பல்வேறு அழைப்புகளும் வந்தன.
சிலர் காலண்டர் வேலையை உடனே நிறுத்துங்கள் அதில் வேறு பெரிய மாற்றம் இருக்கிறது என்றுமட்டும் சொல்லி போனை துண்டித்தனர்.
இந்தமுறை காலண்டர்களில் ஜெயலலிதாவின் பெரிய படத்திற்கு பதிலாக வி.கே.சசிகலாவின் பெரிய படமே இருக்கும்" என்று கூறி முடித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடனான காலண்டர்களை வேண்டாம் எனச் சொன்ன அதிமுக பிரமுகர்கள் பலரும் அதற்கான இழப்பீட்டுத் தொகையை கொடுத்துவிட்டார்களாம். ஆனாலும், நவம்பர் மாதத்திலேயே பெரிய அளவில் அச்சடித்து அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன என்றார் அந்த பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர்.
'அதிமுக பொதுச் செயலாளர் பதவி'
கடந்த வாரம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட பலரும் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மறைந்த இரண்டொரு நாட்களிலேயே சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுக பிரமுகர்கள் பலரும் 2017 காலண்டரில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு பதிலாக சசிகலா உருவப்படம் போட்டு அச்சடிக்குமாறு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.