தமிழகம்

வங்கிகளுக்கு அதிகளவு பணம் வழங்கக்கோரி வங்கி அதிகாரிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிகளவு பணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில பிரிவின் சார்பில் சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ், செயலாளர் ஆர்.சேகரன், துணைத் தலைவர் சிதம்பர குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் முரளிதரன், சிண்டிகேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தாமஸ் பிராங்கோ பேசியதாவது:

ரிசர்வ் வங்கி 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக வங்கிகளுக்கு வழங்க வேண்டும். இப்பிரச்சினையில் பொதுமக்களை திசைதிருப்பக் கூடாது. வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால், வங்கிகளால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே வழங்க முடிகிறது. அதே சமயம் தனியார் வங்கிகளுக்கு அதிகளவில் பணம் வழங்கப்படுகிறது.

வங்கி அதிகாரிகள் தவறாக பணப்பட்டுவாடா செய்வது போலவும், பணமிருந்தும் கொடுக்காதது போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதன் மூலம், ஆளும் கட்சியினர் மக்களின் கோபத்தை வங்கிகள் மீது திசைதிருப்பி விடுகின்றனர். ஏடிஎம்களில் ரூ.24 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம், வங்கிகளில் கூட்டம் குறையும்.

தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுகள் எந்தெந்த வங்கிகளுக்கு வழங்கப்பட்டது என்பதை நாள் வாரியாக, மாநில வாரியாக பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும். இதன் மூலம், இப்பிரச்சினை ஓரளவு தீர்க்கப்படும். ஒருசிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த வங்கி அதிகாரிகள் மீது பழி சுமத்தக் கூடாது.

இவ்வாறு தாமஸ் பிராங்கோ பேசினார்.

SCROLL FOR NEXT