காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். 
தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் வருகையால் புதுப்பொலிவு பெறும் வேலூர் மாவட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

செய்திப்பிரிவு

வேலூர்: தமிழக முதல்வர் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சுற்றுலா மாளிகை புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.

‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கி வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டத்துக்கு பிப்ரவரி 1-ம் தேதி வரவுள்ளார்.

பிப்ரவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலை மையில் ஆலோசனை கூட்டம், அரசின் திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி, மருத்துவம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால் வேலூர் மாவட்டம் விழாக் கோலம் பூண்டுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி காலை வேலூர் வரும் முதல்வருக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

முதல்வர் சாலை மார்க்கமாக வேலூர் வரவுள்ளதால் குண்டும், குழியுமான சாலைகள் சீரமைப்பு பணிகள் விறு,விறுப்பாக நடந்து வருகின்றன. பிப்.1-ம் தேதி காலை காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதால் காட்பாடி அரசுப் பள்ளி வளாகத்தில் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வரு கின்றன.

இப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். 1-ம் தேதி மாலை வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர், அன்றிரவு வேலூர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கவுள்ளார்.

பிப்ரவரி 2-ம் தேதி காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஆடசியர் அலுவலக 5-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் 4 மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.கஸ்டாலின் ஆய்வு கூட்டமும், ஆலோசனை கூட்டத்தையும் நடத்தவுள்ளார்.

தமிழக முதல்வர் வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் முதல்வர் வந்து செல்லும் இடங்கள் பொலிவு பெற்று வருகிறது. முதல்வர் வரும் பாதை முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தி வருகின்றனர். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் தற்காலிக (பேட்ச் ஒர்க்) சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

தேசிய மற்றும் மாநில சாலைகளில் உள்ள தடுப்புச்சுவரில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்கள் இரவோடு, இரவாக அகற்றப்பட்டு புதிய வர்ணம் பூசும்பணிகள் நடந்து வருகின்றன. முதல்வர் வருகையையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற் பார்வையில் 100-க்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

முதல்வர் வேலூர் வந்து செல்லும் வரை ஒரு வழிப்பாதை நடைமுறைப்படுத்துதல், போக்கு வரத்து மாற்றும் செய்வது குறித்தும் காவல் துறை அதிகாரிகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2-ம் தேதி மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டு செல்கிறார்.

SCROLL FOR NEXT