தமிழகம்

அழிவின் விளிம்பில் தமிழக நாடோடிகள்: அரசின் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இந்தியாவில் 862 நாடோடி இனத்தவர்கள் உள்ளனர். ஓரிடத்தில் இல்லாமல் சுற்றித் திரிந்துகொண்டே இருந்ததால் இவர்கள் ‘நாடோடிகள்’ என்றும், நடந்தே செல்வதால் ‘காலோடிகள்’ என்றும் அலைந்துகொண்டே இருப்பதால் ‘அலைகுடிகள்’, ‘மிதவைக் குடிகள்’ என்றும் ஆய்வாளர்களால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 7.5 சதவீதம் பேர் நாடோடி இனத்தவர்கள். தமிழ்நாட்டில் 5 லட்சம் நாடோடி மக்கள் வசிப்பதாகக் கூறப்படுகின்றது. தமிழகத்தில் தாசரிகள், மணியாட்டிக்காரர்கள், குடுகுடுப்பைகாரர்கள், பாம் பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல்வேசக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள், வம்சராஜ் என பல நாடோடி இனத்தவர்கள் உள்ளனர்.

இந்த நாடோடி மக்களைப் ‘பூர்வீக நாடோடிகள்’ (தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்), ‘புலம்பெயர்ந்த நாடோடிகள்’ (பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து குடியமர்ந்துள்ளவர்கள்) என வகைப்படுத்தலாம். நாடோடி இனத்தவர்களில் 162 நாடோடி இன மக்கள் எந்த பட்டியலிலும் இடம்பெறாமல் உள்ளனர். அதனால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்ட உதவிகள், சலுகைகளில் முன்னுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடோடிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் முத்தையா கூறியதாவது:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விழுப்புரம், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் நாடோடி இனத்தவர் அதிக அளவில் வாழ்கின்றனர். சீஸனுக்கு ஏற்ப பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கலை, வித்தை, பிற தொழில்கள் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். சங்க காலத்தில் பாணர், கூத்தர், விறலியர், பொருநர், கோடியர், கட்டுவிச்சி போன்றோர் நாடோடிக் கலைஞர்களாக இருந்து மன்னர்கள் முன்னிலையில் ஆடல் பாடல் திறன்களை வெளிப்படுத்திப் பரிசுபெற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

பின்னர் நிலச்சுவான்தார்கள், ஜமீன்தாரர்களைப் புகழ்ந்து பாடி கலைகூத்துகளைச் செய்து காண்பித்து வெகுமதி பெற்று வந்துள்ளனர். பிரிட்டிஷாரின் ஆட்சிக்குப் பின் இவர்களை ஆதரிப்பார் இன்மையால் தங்களின் கலைத் திறமைகளைக்கொண்டே வருமானம் ஈட்டிப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி, வேடிக்கை வித்தைகளைக் காண்பித்து பார்வையாளர்களைக் கவர்ந்து பணம் பெறுகின்றனர்.

பொதுமக்கள் கொடுக்கும் சில்லறைக் காசுகளும், உணவு உள்ளிட்ட பொருட்களுமே இவர் களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றன. இந்த நாடோடி மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பல ஊர்களுக்குச் செல்கின்றனர்.

பேராசிரியர் ஒ.முத்தையா

திருவிழாக்கள், சந்தைகள் என்று மக்கள் கூடும் இடங்களே இவர்களின் கலைத் தொழிலுக்கு ஆதாரம், வருமானம் தரும் களங்கள். ஊர் ஊராகச் செல்லும் இவர்கள் பஸ் நிலையம், ரயில் நிலையம் என்று காலியாகக் கிடக்கும் இடங்களில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சுகாதாரமற்ற இடங்களில் தங்குவது, சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலை, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, சரியான சிகிச்சையின்மை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். நாடோடி களின் இறப்பு விகிதம் அதிகரிப்பதால் நாடோடிகளின் எண்ணிக்கையும் அவர்கள் சார்ந்த கலைகளும் மங்கி மறைந்துகொண்டே வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனித் துறை ஏற்படுத்தப்படுமா?

பேராசிரியர் முத்தையா மேலும் கூறும்போது, “நாடோடி மக்களுக்கு என்று தனியாக அடையாளம் இல்லை. ஆதரிப்பார் இல்லை, சாதிச் சான்றுகளும் இல்லை. நிலையாக ஒரு இடத்தில் வாழ இயலாத நிலை உள்ளதால் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடியுரிமைச் சான்று, இருப்பிடச் சான்று என அரசின் எந்தச் சான்றும் இவர்களிடம் இல்லை. இதனால் அரசின் சலுகைகள் எதையும் பெற முடியாத நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அடிப்படைக் கல்வி உரிமைகூட நாடோடிகளின் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. நாடோடிகளின் எண்ணிக்கை குறைந்ததே ஒழிய, அவர்களின் வாழ்க்கை முறையில் எந்தவித வளர்ச்சியோ, மாற்றமோ ஏற்படவில்லை. தற்போதுதான் நாடோடிகளை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்காகச் சில அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. நாடோடி மக்களின் மேம்பாட்டுக்காக அரசு தனி நலத்துறையை உருவாக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT