புதுச்சேரி: புதுச்சேரியில் ஜி 20 தொடக்க நிலை மாநாட்டையொட்டி 5 இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானநிலையம், விழா அரங்கு, வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் ஜி 20 தொடக்க நிலை மாநாடு நாளை (ஜன.30) தொடங்குகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்துக்கு பின் ஆட்சியர் வல்லவன் கூறியதாவது: புதுச்சேரியில் ஜி 20 பிரதிநிதிகள் தொடக்க நிலை மாநாடு நாளையும் (ஜன.30), நாளை மறுநாளும், ‘ஒரே பூமி. ஒரே குடும்பம். ஒரே எதிர்காலம்' என்ற மைய கருத்தினை முன்வைத்து நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
முதல் நாள் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். 2-வது நாள் ஆரோவில்லுக்கு சென்று பல்வேறு பகுதிகளை பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள். புதுவை விமான நிலையம், பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட 5 இடங்கள், அவைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் இன்று (ஜன.29) முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். அப்பகுதியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதியில்லை.
மின் விளக்குகளால் அலங்காரம்: ஜி 20 தொடர்பான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வருகிற நவம்பர் வரை நடைபெறும். இம்மாநாடு நடைபெறும் தினங்களில் ஜி 20 அடையாள சின்னத்தை மையமாக வைத்து புதுச்சேரி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டையொட்டி புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தடை என்பது தவறான வதந்தி. இதுபோல் தவறான வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே இதுதொடர்பாக தவறான செய்தியை பரப்பிய புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்: சீனியர் எஸ்பி தலைமையில் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதிநிதிகள் பாதுகாப்புக்கு புதுச்சேரியிலேயே போதுமான போலீஸார் உள்ளனர். பேரிடர் சம்பந்தமாக பிரச்சினை வந்தால் எதிர்கொள்ள, அரக்கோணத்தில் இருந்து டிஐஜி தலைமையில் 37 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.
பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை: இந்த மாநாட்டால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுவனங்கள், கடைகள் வழக்கம்போல் இயங்கும். இம்மாநாட்டை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதேபோல் இம்மாநாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் ஐஜிசந்திரன் தலைமையில் ஆசிரமகூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆயிரம் போலீஸார் பங்கேற்றனர். இதில், சந்தேகம் ஏற்படும் நபராக இருந்தால் உடன் ஆவணங்களை சரிபார்த்து போலீஸார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க ஐஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போலீஸார் பணிக்கு வந்தனர். வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஹோட்டல்கள், விழா நடக்கும் சுகன்யா கன்வென்சன் சென்டர் மற்றும் விமான நிலையம் ஆகிய 5 இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.
இவ்விடங்கள் வரும் பிப்ரவரி 1 வரை போலீஸார் கட்டுப்பாட்டில் இருக்கும். நகரெங்கும் ஜி 20 மாநாட்டை மக்கள் அறியும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்து செல்லும் பகுதியிலுள்ள சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டன. இதனால் பல சாலைகளுக்கு விடிவுகாலம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் நகரில் பல பகுதிகளிலும் மோசமான நிலையிலுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.