கரூர்: கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டதற்காக, டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மேற்பார்வையாளர், விற்பனையாளர் உட்பட 4 பேருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதிக அளவில் மது விற்பனை மேற்கொண்டதற்காக குடியரசு தின விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சமூகவலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து மாவட்ட மேலாளர், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், கேடயம் திரும்பப் பெறப்படவில்லை.